கரை ஒதுங்கிய பீடி இலை பண்டல்கள்
திருப்புல்லாணி அருகே பீடி இலை பண்டல்கள் கரை ஒதுங்கின.;
திருப்புல்லாணி அருகே உள்ளது முத்துப்பேட்டை. இந்த ஊர் கடற்கரை பகுதியில் நேற்று மாலை சுமார் 5 பீடி இலை பண்டல்கள் கரை ஒதுங்கின. 4 பீடி இலை பண்டல்கள் கட்டப்பட்ட நிலையிலும் ஒரு பீடி இலை பண்டல் பிரிந்து இலைகளாகவும் கரை ஒதுங்கின. அந்த பகுதியில் மீன் பிடித்து திரும்பி வந்த மீனவர் ஒருவர் இந்த பீடி இலை பண்டல்களை பார்த்து அதிர்ச்சியடைந்து கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீன்வளத் துறையினர் மற்றும் திருப்புல்லாணி போலீசார் விரைந்து சென்று பீடி இலை பண்டல்களை கைப்பற்றினர். அவற்றை பரிசோதித்த போது சுமார் 8 முதல் 10 கிலோ எடையுள்ள 5 பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பீடி இலை மூடைகளில் இருந்து பிரிந்து இந்த பண்டல்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும், இலங்கைக்கு கடத்திச் செல்லும் போது பிடிபடாமல் இருப்பதற்காக கடலில் வீசபட்டிருக்கலாம் என்றும் அதன் மூலம் பிரிந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து பீடி இலை பண்டல்களை போலீசார் கடற்கரையில் தீ வைத்து எரித்து அழித்தனர்.