புயல் பாதிப்பு நிவாரணம் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஓரிரு நாள்களில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2022-12-10 12:05 IST

சென்னை,

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கடலோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஓரிரு நாள்களில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,

'தமிழகத்தில் மாண்டஸ் புயலால் பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். புயலால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மழை பாதிப்பு, சேதம் குறித்து கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்குள் புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்துவிடும்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஓரிரு நாள்களில் நிவாரணம் வழங்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலே பாதிப்பு குறைந்துள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியினர் மரங்கள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் முழுவதுமாக இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்