'மாண்டஸ்' புயல் எதிரொலி: மீனவ கிராமங்களில் கடல் சீற்றம்

‘மாண்டஸ்’ புயல் காரணமாக மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது. கோடி விநாயகர் கோவிலை கடல் நீர் சூழ்ந்தது.;

Update: 2022-12-09 20:17 GMT

வானம் மேகமூட்டம்

வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீயணைப்பு வீரர்கள் தயார்நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் புயல் காரணமாக புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு பரவலாக சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதேநேரத்தில் பலத்த காற்றும் வீசியது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

புழுதி பறந்தது

பலத்த காற்றின் காரணமாக மரக்கிளைகள் சாய்ந்தாடின. சாலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அசைந்தாடின. காற்றின் காரணமாக சாலையில் புழுதி பறந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர். காற்றின் வேகத்தால் புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் பரந்து விரிந்த தண்ணீர் கடல் போல் காட்சியளித்தது. மேலும் காற்றின் வேகத்தால் தண்ணீரில் அலைவீசியது.

காலை 10 மணிக்கு மேல் சூரிய வெளிச்சம் தென்பட்டது. அதன்பின் வானம் மேகமூட்டமும், வெயில் அடிப்பதாகவும் இருந்தது.

கடல் சீற்றம்

புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், முத்துக்குடா உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. மேலும் மணமேல்குடி, கோடியக்கரை, பொன்னகரம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீனவர்கள் தங்களது படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்தனர். மேலும், மீன்பிடி வலைகளையும் மூட்டையாக கட்டி கரையோரத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

கோடியக்கரை சுற்றுலா தலம் வெறிச்சோடியது

கட்டுமாவடி நாட்டுப்படகு மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகளை அலையாத்தி காட்டு பகுதியில் கயிறுகட்டி பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். பொதுவாக அலையாத்தி காடுகள் புயலை எதிர்கொள்ளும் மரங்கள் என்பதால் மரங்களின் இடையில் படகுகளை நிறுத்திவைத்தனர். மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் பொன்னகரம், கட்டுமாவடி, வடக்கம்மாபட்டிணம் உள்ளிட்ட கடலோர பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மணமேல்குடி, கோடியக்கரை சுற்றுலா தலத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் திதி கொடுக்க வருபவர்கள் வந்து செல்வார்கள். ஆனால் புயல் காரணமாக கோடியக்கரை பகுதிக்கு நேற்று பொதுமக்கள் யாரும் வரவில்லை. இதனால் கோடியக்கரை சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது.

கோடி விநாயகர் கோவில்

கோடியக்கரை பகுதியில் உள்ள கோடி விநாயகர் கோவில் கடல் கொந்தளிப்பால் கடல் நீரால் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி தலைமையில் போலீசார் மணமேல்குடி உள்ளிட்ட கடலோர பகுதியில் தீவிர ரோந்து பணிமேற்கொண்டனர். கடலோர பகுதிக்கு வந்த பொதுமக்களை திருப்பி அனுப்பினார்கள். மேலும் தடையை மீறி யாரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனரா? என பார்வையிட்டனர். விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் புயல் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கட்டுமாவடி, மணமேல்குடி பெரிய மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து இல்லாமல் வெறிச்சோடியது. வெளியூர் வியாபாரிகள், மீன் பிரியர்கள் மீன் மார்க்கெட்டிற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மழையளவு விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- பெருங்களூர்-1, புதுக்கோட்டை-2, ஆலங்குடி-4.20, கந்தர்வகோட்டை-3.20, கறம்பக்குடி-7.20, கீழணை-4.60, திருமயம்-4.80, அறந்தாங்கி-5.40, ஆயிங்குடி-11.20, நாகுடி-7.60, மீமிசல்-3.20, ஆவுடையார்கோவில்-7.40, மணமேல்குடி-22.40, இலுப்பூர்-2.80, குடுமியான்மலை-9, அன்னவாசல்-8.40, விராலிமலை-8, உடையாளிப்பட்டி-1.50, கீரனூர்-2, பொன்னமராவதி-5, காரையூர்-1.

Tags:    

மேலும் செய்திகள்