புயல் பேரிடர் ஒத்திகை பயிற்சி

கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் புயல் பேரிடர் ஒத்திகை பயிற்சி கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2023-09-02 18:45 GMT

கடலூர்:

கடலூர் செம்மங்குப்பத்தில் புயல் பேரிடர் ஒத்திகை பயிற்சி நேற்று காலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு உபகரணங்களை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து புயல் காரணமாக பலத்த காற்று வீசும்போது பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பு மையங்களுக்கு எவ்வாறு கொண்டு சேர்ப்பது, கடல் சீற்றத்தினால் பாதிப்புக்குள்ளாகும் படகுகளில் இருந்து மீட்கப்பட்ட மீனவர்களையும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து எவ்வாறு சிகிச்சை மேற்கொள்வது போன்றவை குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது.

தகவல் பரிமாற்ற ஒத்திகை

மேலும், பேரிடரின்போது தகவல் பரிமாற்றமானது மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து களஅளவிற்கு உடனுக்குடன் எவ்வாறு சென்றடைகிறது என்பதை உறுதி செய்ய, பயிற்சியில் ஈடுபட்டுள்ள கள அலுவலர்களுக்கு வாக்கி-டாக்கி கருவிகள் மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்புபடையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 57 குழுவினர் மற்றும் 641 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவ முகாம்

இதேபோல் புவனகிரி தாலுகா சாமியார்பேட்டையில் வெள்ள பேரிடர் ஒத்திகையில் நடந்த மருத்துவ முகாம் ஒத்திகையையும், குறிஞ்சிப்பாடி அருகே சிறுபாளையூரில் மாதிரி ஒத்திகையின் போது பொதுமக்களை பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதையும், சிதம்பரம் பெராம்பட்டு, காட்டுமன்னார்கோவில் சர்வராஜன்பேட்டை ஆகிய இடங்களில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சிகளையும் கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்