முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறுவதால் முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-05-24 21:00 GMT

கூடலூர் அருகே லோயர்கேம்பில் உள்ள முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் வகையில் புதிய கூட்டுக்குடிநீர் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, கூடலூர் குருவனூற்று பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை, தடுப்புச்சுவர் மற்றும் ராட்சத குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி, ஆற்றின் குறுக்கே தடுப்புச்சுவர் மற்றும் தடுப்பணை பாதியளவு மட்டுமே கட்டப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மீதியுள்ள கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று முதல் முல்லைப்பெரியாற்றில் இருந்து தமிழக பகுதிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 118.05 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 159 கனஅடியாகவும் இருந்தது. மதுரை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்காக முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்