கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தம்

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.;

Update: 2023-10-07 07:22 GMT

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஜமீன் கொரட்டூர் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். அதன்படி கடந்த மே 1-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தொடர் நீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வந்தது. மேலும் கடந்த வாரம் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏரிக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்ததால் கடந்த மாதம் 25-ந் தேதி பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பை கருதி உபரிநீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. பின்னர் கிருஷ்ணா நீரை கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு திருப்பிவிட்டனர்.

இந்த நிலையில் கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியும் முழு கொள்ளளவு எட்டு நிலையில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்துமாறு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசை கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் நேற்று முன்தினம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். நேற்று மாலை நிலவரப்படி ஏரியில் நீர் மட்டம் 33.54 அடியாக பதிவாகியது. பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 400 கன அடிக்கும் தண்ணீர் அனுப்பப்படுகிறது. கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் 490 மில்லியன் தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்