ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம்
சிவகிரி அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரி அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் தென்காசி மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை அளித்தார். பின்னர் அவர் கூறும்போது, 'சிவகிரி அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை மற்றும் சிசேரியன் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல்முறையாக ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை நடைபெற்று உள்ளது. இது பாராட்டுக்குரியது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை மக்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.
தென்காசி மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் ராமநாதன் கூறுகையில், 'ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை என்பது மிகவும் எளிதானது. வலி இல்லாதது. தழும்பு இல்லாதது' என்றார். சிவகிரி அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் இசக்கி கூறும்போது, 'இங்கு குடல் இறக்கம், குடல்வால்வு, மூலவியாதி மற்றும் அனைத்து வகை பொது அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் டாக்டரை ஆலோசித்து தேவையான சிகிச்சைகள் பெற்று பயன்பெறலாம்' என்றார். முகாமில் டாக்டர்கள் சொர்ணலதா, ராம்சுகாஷினி, மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.