பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்கள் அதிகரிப்பதை தவிர்க்க நடவடிக்கை

பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்கள் அதிகரிப்பதை தவிர்க்க நடவடிக்கை கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.;

Update: 2023-03-14 20:08 GMT

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகளில் தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது குறித்து பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 23, 329 மாணவ-மாணவிகள் எழுத வேண்டிய நிலையில் 1,040 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. இதேபோன்று நேற்று தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வினை 21,951 மாணவ-மாணவிகள் எழுத வேண்டிய நிலையில் 959 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

கடந்த காலங்களை விட தேர்வு எழுத வராத மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

கடந்த காலங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 30 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத நிலையில் அவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடும்.

நீக்க முடியாத நிலை

ஆனால் தற்போது இந்த பட்டியல் அனைத்துமே ஆன்லைன் முறையில் தேர்வுத்துறை இயக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயர்கள் தேர்வு பட்டியலில் இருந்து நீக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

மேலும் பிளஸ்-1 தேர்வு எழுதாத மாணவர்களும், பிளஸ்- 2 வகுப்பிற்கு செல்ல தடை இல்லாத நிலையில் அவர்கள் பிளஸ்-1 தேர்வை தவிர்க்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தான் தேர்வு எழுது வராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தவிர்க்க வேண்டும்

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், முதல்-அமைச்சர் கூறியது போல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயம் இல்லாமல் தேர்வெழுதும் நிலையை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

அந்த நிலையை ஏற்படுத்தவில்லை.ஆதலால்தான் தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு வேறு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இனிவரும் காலங்களிலாவது தேர்வு எழுத வராத மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்