வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மணல்மேடு பகுதியில் நடைபெறும் வளட்ச்சி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.;
மணல்மேடு:
பேரூராட்சி மன்ற கூட்டம்
மணல்மேடு பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் அவை கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் கண்மணி அறிவு வடிவழகன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ், துணைத்தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு;-
ரகுவரன் (தி.மு.க.) :- மணல்மேடு 5-வது வார்ட்டில் சிவன் கோவில் முதல் அய்யனார் கோவில் வரை 14 மின்கம்பங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.அதனை உடனே அமைக்க வேண்டும். வார்டு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பணிகளுக்கான தொகையை ஆய்வு செய்து உடனே வழங்க வேண்டும்.
வரவு- செலவு
சத்தியராஜ் (வி.சி.க.):- பேரூராட்சி பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசு பணிகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த உறுப்பினர்களின் பெயரை இடம்பெற செய்ய வேண்டும்.
மதன் (அ.தி.மு.க.) :- அகர மணல்மேடு பகுதியில் சாலையோரம் உள்ள பனை மரங்களில் கூடுகட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கதண்டுகளை உடனே அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளின் விவரம், வரவு- செலவு கணக்குகளை உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மந்தமாக நடந்துவரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாண்டியன் (அ.தி.மு.க.) :- ராதாநல்லூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் கரையான்குளம், தாமரைக்குளம் உள்ளிட்ட குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசமூர்த்தி (தி.மு.க.) :- சின்ன இலுப்பப்பட்டு குறுக்கு ரோட்டில் புதிதாக சாலை அமைக்க வேண்டும். ராஜசூரியன்பேட்டை சுடுகாட்டுக்கு செல்லும் சாலையோரம் வாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். மேலும் அங்குள்ள ராஜன்வாய்க்காலில் படித்துறை கட்ட வேண்டும்.
செல்வி (அ.தி.மு.க.):- 2-வது வார்டு பெரிய இலுப்பப்பட்டு மெயின்ரோடு பகுதியில் புதிதாக மினி குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.
செல்வம் (காங்.) :- விருதாங்கநல்லூர் பகுதியில் புதிய மின் கம்பங்களை உடனே அமைக்க வேண்டும்.
கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய பரிசீலனை செய்து காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். பேரூராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான சிறு, சிறு கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படும் என்றார்.
இதில் இளநிலை உதவியாளர் மாரியப்பன், சுகாதார மேற்பார்வையாளர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.