தமிழ்நாடு கல்வியறிவில் பின்தங்கி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு கல்வியறிவில் பின்தங்கி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2023-01-19 14:31 IST

சென்னை,

'எண்ணும், எழுத்தும் மக்களுக்கு கண் போன்றது' என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, மாணவ, மாணவியரின் வாசிப்பு திறன், கணிதத் திறன், புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை மாணவ மாணவியரிடையே அதிகரிக்கவும், தமிழ்நாடு கல்வியறிவில் பின்தங்கி வருவதை தடுக்கவும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும், கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரிது" என்பதற்கேற்ப ஒவ்வொருவரும் தன் வாழ்வில் கல்வியறிவு பெற வேண்டும். மனித வாழ்க்கை வளம் பெறுவதற்கும், சமுதாய மேம்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குவது வற்றாத செல்வமாம் கல்வி என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கல்வியறிவை பெறுவதில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாகும்.

2022-ஆம் ஆண்டு கல்வி தகுதிநிலை அறிக்கையில், தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் தன்மை, கணிதத் திறன் ஆகியவை எச்சரிக்கை விடும் அளவுக்கு தமிழ்நாட்டில் குறைந்துள்ளதாகவும், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில், நான்கில் ஒருவரால் மட்டுமே இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தை வாசிக்க முடிகிறது என்றும், ஒன்றாம் வகுப்பு பயிலும் பெரும்பாலான மாணவர்களால் எழுத்துக்களை படிக்க இயலவில்லை என்றும், இதே நிலை தான் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளிலும் நீடிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், 920 கிராமங்களில் உள்ள 3 முதல் 16 வயது வரையிலான 30,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரிடம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், ஒன்றாம் வகுப்பு பயிலும் 42 விழுக்காடு மாணவர்களால் 1 முதல் 9 வரையிலான எண்களைக்கூட படிக்க இயலவில்லை என்றும், இதேபோன்று ஆங்கில வார்த்தைகளை படிக்கும் திறன் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே வெகுவாக குறைந்துவிட்டதாகவும், ஒன்றாம் வகுப்பு பயிலும் 53 விழுக்காடு மாணவ, மாணவியர் மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் 23 விழுக்காடு மாணவ, மாணவியரால் ஆங்கிலத்திலுள்ள பெரிய எழுத்துகளைகூட படிக்க இயலவில்லை என்றும், வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. கல்வி அறிவில் தேசிய சராசரிக்கு கீழ் தமிழ்நாடு உள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. அதே சமயத்தில், அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை அதிகரித்திருப்பது ஓர் ஆறுதலான விஷயம்.

மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் தன்மை குறைந்ததற்கு கொரோனா தொற்று நோய் காரணமாக கூறப்பட்டாலும், பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டே போவதும், கல்விக் கொள்கை குறித்து ஒரு திடமான முடிவை அறிவிக்காததும்தான் இதற்கு முக்கியக் காரணங்களாகும். தி.மு.க. ஆட்சி அமையப்பெற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், மாநிலக் கல்விக் கொள்கையை அறிவிக்காதது, மாணவச் செல்வங்களின் கல்விமீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. மாணவ, மாணவியரின் கல்விமீது கவனம் செலுத்தாத தி.மு.க. அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலை நீடித்தால், மாணவ, மாணவியரின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும். மாணவ, மாணவியரிடையே, குறிப்பாக தொடக்கக் கல்வி மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் தன்மை, கணிதத் திறன் ஆகியவை குறைந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து, அதைக் களைய முனைப்பான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

'திராவிட மாடல்' என்று சொல்லிக் கொண்டு நேரத்தை வீணடிக்காமல், 'எண்ணும், எழுத்துமாகிய இரண்டும் மக்களுக்கு கண் போன்றது' என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, வாசிக்கும் திறன், கணிதத் திறன், புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை மாணவ மாணவியரிடையே அதிகரிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக எடுக்க வேண்டுமென அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்