சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-20 18:45 GMT


இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கூறியதாவது:-

கிராம விவசாயிகள் சங்க தலைவர் மணியன்:- வேதாரண்யம் ஒன்றியத்துக்குட்பட்ட கொல்லப்புலம், வண்ணாம்புலம், மூன்றாம்புலம் ஆகிய ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தி, சட்ரஸ் அமைத்தால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாசனத்துக்கான தண்ணீர் கிடைக்கும்.

வாய்க்கால்களில் உடைப்பை சரிசெய்ய வேண்டும்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன்:- செல்லூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் தேவநதி வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலத்துக்குள் மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது.

பெருங்கடம்பூர் அருகே உள்ள எலிசியம் வாய்க்காலில் உள்ள சட்ரசை சரிசெய்ய வேண்டும். 2022-23-ம் ஆண்டுக்கான உளுந்து, நெற்பயிற்களுக்கான இழப்பீட்டு காப்பீடு அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காப்பீட்டு தொகையை வழங்க...

நாகை மாவட்ட வேளாண் உற்பத்தியாளர் குழு உறுப்பினர் பாஸ்கரன்:- பயிர் காப்பீடு செய்வதற்கு ஏதுவாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் மைக் விளம்பரம் செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் கடைசி நேர தாமதம் தவிர்க்கப்படும்.

காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கமல்ராம்:- தலைஞாயிறு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். ஆலடி வாயக்காலில் உப்பு நீரை வெளியேற்ற வேண்டும்.

தூர்வார வேண்டும்

டெல்டா பாசனதாரர் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த பிரபாகரன்:- வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ஆறு, வாய்க்கால்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி மழைநீர் வடிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் கொள்முதல் நிலையத்தில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து தடுக்க வேண்டும்.

கீழ்வேளூர் தாலுகா ஓர்குடி கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

நிலுவையில் உள்ள சம்பளத்தை...

இளம் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த அகிலன்:- தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, ஏக்கருக்கு எவ்வளவு கடன் தொகை வழங்கும் என்பதை வெளிப்படை தன்மையுடன் வங்கிகளில் பதாகை வைக்க வேண்டும். 100 நாள் வேலை பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாய சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் சம்பந்தம்:- தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதால் இனி வரும் காலங்களில் தமிழ்நாடு அரசே காப்பீடு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும்.

தடையின்மை சான்று

முஜூபுஷரீக்:- வேதாரண்யம் அருகே கோவில்பத்து திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். வேட்டைகாரன் இருப்பு பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீர் செய்ய வேண்டும்.

தனபால்:- இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட சிட்டா இருந்தால் மட்டுமே கடன் பெற விண்ணப்பம் செய்ய முடியும். ஆனால் அறநிலையத்துறை தடையின்மை சான்று வழங்க மறுப்பதால் பயிர் கடன் பெற முடியவில்லை. கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக நாகை முதுநிலை மண்டல மேலாளர் சிவபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, வேளாண்மை இணை இயக்குனர் தேவேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்