பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கும் மதுபானக்கூடங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஷேக்மேட் மதுபானக்கூட நிறுவனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;
சென்னை,
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரும் ஷேக்மேட் மதுபானக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு பணியாற்றி வந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிய பாதுகாப்பு வசதிகளின்றியும், நேரக்கட்டுப்பாடின்றியும் சென்னையில் பல மதுபானக்கூடங்கள் இயங்கி வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், வணிக நோக்கத்தை மட்டுமே மையமாக கொண்டு இதுபோன்ற கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி வழங்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் மதுபானக் கூடங்களுக்கு எந்தவித ஆய்வுகளுமின்றி தமிழக அரசு அனுமதி வழங்கியதன் விளைவே, மூன்று அப்பாவி தொழிலாளர்களின் உயிர்கள் பறிபோனதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்களின் உயிரை வணிக நோக்கத்துடன் அணுகாமல், பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கிவரக்கூடிய மதுபானக்கூடங்களை கணக்கெடுத்து, உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஷேக்மேட் மதுபானக்கூட நிறுவனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.