உணவில்லாமல் இறந்த 2 பேரின் உடல்களுடன் 7 நாட்கள் இருந்த தாய்- மகன் தனியார் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு

தாய்- மகன் தனியார் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு

Update: 2023-02-14 19:30 GMT

கோபியில் உணவில்லாமல் இறந்த 2 பேரின் உடல்களுடன் 7 நாட்கள் இருந்த தாய், மகன் ஆகியோர் தனியார் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

7 நாட்களாக...

கோபி வண்டிப்பேட்டையை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 74). இவருடைய மனைவி சாந்தி (60). இவர்களுடைய மகள் சசிரேகா (35). மகன் சரவணக்குமார் (33). சசிரேகாவுக்கு திருமணம் ஆகி திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தனது கணவர் வீட்டாருடன் வசித்து வருகிறார். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் சரவணக்குமாரை தன்னுடன் வைத்து மோகனசுந்தரம் பராமரித்து வந்தார். மேலும் சாந்தியின் தாயார் கனகாம்பாள் (80) என்பவரும் மோகனசுந்தரத்துடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாததால் வீட்டில் இருந்த அனைவருமே வறுமையால் வாடினார்கள்.

இந்தநிலையில் உணவில்லாமல் மோகனசுந்தரமும், அவருடைய மாமியார் கனகாம்பாளும் அடுத்தடுத்து இறந்தனர். இறந்தவர்களை புதைக்க பணம் இல்லாததால் அழுகிய நிலையில் கிடந்த உடல்களுடன் 7 நாட்களாக சாந்தியும், சரவணக்குமாரும் இருந்துள்ளனர்.

உடல்கள் புதைப்பு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும், கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோகனசுந்தரம், கனகாம்பாள் ஆகியோரின் உடலை கைப்பற்றி சொந்த செலவில் புதைத்தார்கள். மேலும் சாந்தி மற்றும் அவருடைய மகன் சரவணக்குமார் ஆகியோர் நிலைமையை பார்த்த அவர்களை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதற்காக ஈரோட்டில் உள்ள அட்சயா தனியாா் அறக்கட்டளை நிர்வாகிகள் சாந்தி மற்றும் சரவணக்குமாரை பராமரிக்க சம்மதம் தெரிவித்தனர்.

நெகிழ்ச்சி

இதைத்தொடர்ந்து அட்சயா அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று கோபிக்கு வந்தனர். இதையடுத்து சரவணக்குமாரின் முடியை எடுத்து அவரை குளிப்பாட்டி புத்தாடைகளை அறக்கட்டளை நிர்வாகிகள் அணிவித்தனர். இதேபோல் சாந்தியையும் குளிப்பாட்டி அவருக்கும் புத்தாடைகள் அணிவித்தனர். ஏற்கனவே அவர்கள் 2 பேருக்கும் நேற்று காலையில் போலீசார் சார்பில் இட்லி வழங்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் அறக்கட்டளை நிர்வாகிகள், தேனீர் அளித்தனர். அந்த தேனீரை சாந்தி வாங்கி குடித்தார். மேலும் ஒரு டம்ளரில் வழங்கப்பட்ட தேனீரை வாங்கி தன்னுடைய மகன் சரவணக்குமாருக்கும் குடிக்க குடித்தார். இந்த காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

பாராட்டு

பின்னர் கோபி நகராட்சி தலைவர் நாகராஜ் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சாந்தி, சரவணக்குமார் ஆகியோரை அறக்கட்டளை நிர்வாகிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். முன்னதாக மணப்பாறை அப்துல் சமது எம்.எல்.ஏ. நேற்று சாந்தி, சரவணக்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சாந்தி மற்றும் அவருடைய மகன் சரவணக்குமாரை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுத்த கோபி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்