தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?
தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.;
பொறுமை இல்லை
சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும் பொறுத்துக் கொள்வது இல்லை.
அதைத் தலைவருக்கே ஏற்பட்ட இழுக்காகக் கருதி வெகுண்டு எழுகிறோம்.
அத்தகைய மனம்கொண்ட நாம், அந்தச் சிலைகளுக்கு இயற்கையில் ஏதேனும் குற்றம் குறை வராதவாறு பார்த்துக் கொள்கிறோமா என்றால்? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அலங்காரம்
சிலைகளை வைப்பதுடன் சரி. பிறந்தநாள், நினைவு நாட்களில் மட்டுமே அலங்காரம் செய்கிறோம். மற்ற நாட்களில் காகங்களையும், குருவிகளையும் அலங்கோலப்படுத்த விடுகிறோம்.
தலைவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்ற நமது அடிப்படை நோக்கம் இங்கே அர்த்தமற்றுப் போவதை யாரும் உணர மறுக்கிறோம்.
இதுபற்றி சமூகப் பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
ஆர். நல்லக்கண்ணு
இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறியதாவது:-
மக்கள் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிலைகள் வைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று யாரும் கருதக்கூடாது.
தலைவர்களின் சிலைகளை தினந்தோறும் தூய்மை செய்து பராமரிக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் அவர்களது பிறந்தநாள், நினைவுநாளின்போது சிலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, வர்ணம் பூசவேண்டும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களது கொள்கைகளை பரப்ப வேண்டும்.
இதுதான் மறைந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகவும், புகழ் அஞ்சலியாகவும் இருக்கும்.
இவ்வாறு ஆர்.நல்லகண்ணு கூறினார்.
சிவாஜி கணேசன் சிலை
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை பராமரிப்பு குறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-
என்னுடைய தந்தையார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் அமைத்து தமிழக அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது.
மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிறந்தநாள், நினைவுநாட்களில் மட்டுமின்றி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம்.
மறைந்த தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து பராமரித்து அவர்களது புகழைப் போற்ற வேண்டும். இவ்வாறு நடிகர் பிரபு கூறினார்.
காந்தி சிலையை பராமரிக்க
புதுக்கோட்டையில் தலைவர்களின் சிலைகள் ஏராளமாக உள்ளன. தலைவர்களின் சிலைகள் அனைத்திற்கும் பாதுகாப்பு கருதி இரும்பிலான கூண்டு போன்று வைக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள், நினைவு நாள் தினத்தின் போதும், ஏதேனும் முக்கிய நிகழ்வின் போதும் அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் தலவைர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல அண்ணாசிலை அருகே காந்தி பூங்காவில் காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த நிலையில் காந்தி சிலையை முறையாக பராமரிக்க காந்தி பேரவையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
காய்ந்த மலையை கூட அகற்றுவதில்லை
அகில இந்தியா மகாத்மா காந்தி சமூகநல பேரவையின் தலைமை நிலைய செயலாளர் மோகனப்பிரியா:- ''புதுக்கோட்டையில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தி சிலை வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சிலையை கடந்த 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி திறந்து வைத்தது அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர். மார்பளவு கொண்ட கற்சிலையின் மீது வெண்கல நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்த சிலையோடு பூங்காவையும் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். அதன்பின் காந்திபேரவையினர் இந்த சிலையை பராமரித்து வந்தனர். அதன்பின் நகராட்சி நிர்வாகம் வசம் மீண்டும் சென்றது. தற்போது இந்த சிலையை சரியாக பராமரிக்க உள்ளனர். காந்தி ஜெயந்தி அன்று கூட சிலைக்கு மாலை அணிவிக்கும் செல்லும் போது அந்த இடம் சுத்தம் செய்யப்படுவதில்லை.
சிலையில் இருக்கும் காய்ந்த மாலையை கூட அகற்றுவதில்லை. சிறப்பு வாய்ந்த இந்த பூங்கா தனியாரின் வசம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டு விட்டது. இதனை மீண்டும் காந்தி பேரவையிடம் ஒப்படைக்க வலியுறுத்தி வருகின்றோம். இந்த பூங்காவில் காந்தி சிலையை முறையாக பராமரித்து காந்தியின் கொள்கை மற்றும் அவரது வாழ்க்கை பற்றிய குறிப்புகளை ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். மேலும் காந்திய கொள்கை சார்ந்த புத்தகங்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யலாம். காந்தி பூங்காவோடு சிலையை பராமரிக்க நாங்கள் தயாராக உள்ளோம். நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து வருகிறோம்''.
தேச பக்தர்களுக்கு வருத்தம்
கந்தர்வகோட்டை வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராமையன்:- தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் சிலைகள் தேச பற்றாளர்களால் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்படுகிறது. ஆனால் நாளடைவில் இந்த தேச தலைவர்களின் சிலைகள் சரிவர பராமரிக்கப்படாமல் நின்று விடுகிறது.
அந்த குறிப்பிட்ட தலைவர்களின் பிறந்தநாள் அன்றோ அல்லது நினைவு நாள் அன்றோ சிலைகள் சுத்தம் செய்யப்படுவதும் சிலையை சுற்றி உள்ள இடங்களை சரி செய்வதும், வண்ண விழாக்குகளால் அலங்கரிப்பது போன்ற நிகழ்வுகள் தான் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது போன்ற செயல்கள் என்னை போன்ற தேச பக்தர்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆகவே தேசத் தலைவர்களுக்கு வைக்கப்படுகின்ற சிலைகள் முறையாக பராமரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மாதம் ஒரு முறை சுத்தம் செய்யலாம்
அறந்தாங்கி விஜயபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்:- அறந்தாங்கியில் உள்ள சிலைகளுக்கு அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய போகும் போது மட்டுமே சிலைகளை சுத்தம் செய்கின்றனர். மற்ற படி முறையாக பராமரிப்பு இல்லை. சிலையை சுற்றி அசுத்தமாக காணப்படுகிறது. சிலை அருகே உள்ள இடத்தில் பூங்கா அமைத்து மின்விளக்கு அமைக்கலாம். பறவைகள் சிலை அருகே அசுத்தம் செய்கிறது. தற்போது பராமரிப்பு போதாது. இதனால் மாதம் ஒரு முறை தண்ணீரால் சிலையை சுத்தம் செய்தால் நல்லா இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினர்.
அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற உத்தரவிட்டது போன்று அனுமதியோடு வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருக்கிறது.