15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்தப்படும் என அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கூறினார்.;
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் மீன்சுருட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் குறைவாக வழங்கக்கூடிய பணியாளர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி வழங்க வேண்டும். பொது வினியோக திட்டத்திற்கான தனித்துறை பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். ரேஷன் கடை மற்றும் டாஸ்மாக் ஊழியர்களின் கல்வி தகுதிக்கேற்ப ஊதிய வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் மாநில முழுவதும் 100 மையங்களில் 38 மாவட்டங்களிலும் பிரசார இயக்கம் நடத்தி நவம்பர் மாதம் 16-ந் தேதி தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். கடந்த காலங்களில் 3 முறை தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இந்த முறையும் முதல்-அமைச்சரை சந்திக்க முடியாவிட்டால் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு இடத்தில் மனு வைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.