துப்பாக்கி சூடு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் - கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

Update: 2022-08-20 20:09 GMT

மதுரை:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி சம்பவத்தில் மக்களை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்தவில்லை என விசாரணை அறிக்கையில் கூறுகின்றனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முழுமையான அறிக்கையை வெளியிட தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துப்பாக்கிசூட்டுக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கும் தொடர்பில்லை என கூறுவது நியாயமற்றது. மத்திய அரசானது மாநில அரசுகளை துட்சமாக கருதுகிறது. மாநில அரசு தனியார் நிறுவனங்களிடம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவதை மத்திய அரசு தடுக்கிறது.

அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்காக கூடுதல் விலைக்கு குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டும் மின்சாரம் வாங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இது கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது மோடிக்கு உள்ள அக்கறையை காட்டுகிறது.

மோடி அரசுக்கு முடிவு கட்டுவோம் என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தவுள்ளோம். சீமான் பா.ஜ.க.வின், பி டீம் போல செயல்படுகிறார். தி.மு.க. குறித்த சீமானின் கருத்து கற்பனையானது. மாநில கட்சிகள் கருத்து வேறுபாடுகளை களைந்து , ஒற்றுமையுடன் இருந்து 2024-ல் பா.ஜ.க.வை தமிழகத்தை விட்டு விரட்டியடிக்க வேண்டும்.

தேசியக்கொடியை ஏற்ற வலியுறுத்தி, கொடி விற்பனையில் ஈடுபட்டு இந்தியாவுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காமல், துரோகம் செய்துவிட்டு, அதனை மறைக்க தேசியக்கொடியை ஏற்ற வலியுறுத்தி மக்களை திசை திருப்புகின்றனர். கம்யூனிஸ்டு கட்சியின் மீது அவதூறு சுமத்தும் பா.ஜ.க. மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்