திருச்சி மாநகர நுண்ணுயிர் உரக்கூடங்களில் நவீன கேமராக்கள்
திருச்சி மாநகர நுண்ணுயிர் உரக்கூடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.;
நுண்ணுயிர் உரக்கூடங்கள்
திருச்சி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து பெறப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து உரமாக்கி அந்தந்த பகுதிகளிலேயே அப்புறப்படுத்தும் நோக்கில் மாநகரில் 38 இடங்களில் நுண்ணுயிர் உரக்கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.
தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 92.548 கிலோ ஈரப்பத கழிவுகள், 170 டன் உலர் கழிவுகள், 1¼ டன் மருத்துவ கழிவுகள், 1½ டன் வீட்டுக்கழிவுகள், 15½ டன் மார்க்கெட் கழிவுகள் என மொத்தம் 276 டன் கழிவுகள் மாநகராட்சி பகுதியில் சேகரமாகிறது. இவற்றை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் சேகரித்து நுண்ணுயிர் உரக்கூடங்களுக்கு கொண்டு வருகிறார்கள்.
குற்றச்சாட்டு
இந்தநிலையில், பொதுமக்களிடமிருந்து குப்பை பெறும் போதும், அவற்றை தரம் பிரிக்கும் போதும், கழிவுகளின் எடையை அளவிடும்போதும், எந்திரங்கள் மூலம் உடனுக்குடன் உரமாக மாற்றும் போதும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர் அலட்சியமாக செயல்படுவதாகவும், பணியாளர்கள் பலர் கையெழுத்து போட்டுவிட்டு, பணிக்கு வராமல் சென்று விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக பொதுமக்களிடம் பெறக்கூடிய குப்பையை முறையாக தரம் பிரித்து உரக்கூடங்களுக்கு கொண்டு வராமல், ஏதாவது ஒரு பகுதியில் கொட்டுவது, தீ வைத்து எரிப்பது போன்ற செயல்களில் சில பணியாளர்கள் ஈடுபடுவதாகவும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, 38 நுண்ணுயிர் உரக்கூடங்கள், அவற்றுக்கு குப்பை கொண்டு வரக்கூடிய வாகனங்களை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
நவீன கண்காணிப்பு கேமரா
இதற்காக நுண்ணுயிர் உரக்கூடங்களில் நவீன கண்காணிப்பு கேமரா மற்றும் 'வாய்ஸ் கமாண்டிங் சிஸ்டம்' அடங்கிய கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக வாமடம், குழுமிக்கரை, உழவர்சந்தை போன்ற பகுதிகளில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த கண்காணிப்பு கேமராக்களில் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தே கண்காணித்து இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் நேரடியாக பணியாளர்களிடம் பேசலாம். இதற்காக வாய்ஸ் கமாண்டிங் சிஸ்டம் அடங்கிய 2 கேமராக்கள் தனித்தனியாக பொருத்தப்பட்டுள்ளன. மேலும் குப்பை சேகரிக்கச் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட உள்ளன.