மாநில அளவிலான நீச்சல் போட்டி
விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.;
விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 42 பள்ளிகளில் இருந்தும், 8 கல்லூரிகளில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணி கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். போட்டியில் பள்ளிகளுக்கான ஆண்கள் பிரிவில் எம்.ஜி.வி. குளோபல் அகாடமி அணியும், பெண்கள் பிரிவில் எஸ்.பி.பி. மில்லினியம் அணியும் வெற்றி பெற்று சின்னதுரை நாடார் சுழற்கோப்பையை வென்றது. கல்லூரி மாணவர்களுக்கான ஆண்கள் பிரிவில் கலசலிங்கம் பல்கலைக்கழக கல்லூரி அணியும், பெண்களுக்கான பிரிவில் மதுரை லேடி டோக் கல்லூரி அணியும் முதல் இடத்தை பெற்று டீ.கே. ஜெகதீசன் சுழற்கோப்பையை வென்றனர். கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் வைரமணி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னதாக கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குனர் டாக்டர் முருகேசன் வரவேற்றார். முடிவில் உடற்கல்வித்துறை பயிற்றுனர் ரேவதி நன்றி கூறினாா்.