மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை

கடலூர் சிறுவா் சீா்திருத்த பள்ளியில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவத்தை தொடர்ந்து நேற்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

Update: 2023-03-30 20:18 GMT

கடலூர்:

கடலூர் எஸ்.என்.சாவடியில் அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளி (கூர்நோக்கு இல்லம்) செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 13 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து சிறுவர்கள் அடிக்கடி தப்பி ஓடும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் இங்குள்ள 6 சிறுவர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர், அவர்களை போலீசார் பிடித்து மீண்டும் சிறுவா் சீா்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் நேற்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், சிறுவா் சீா்திருத்த பள்ளிக்கு வருகை தந்தார்.

விசாரணை

பின்னர் அவர் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் ஏற்கனவே தப்பி ஓடிய 6 சிறுவர்களில் 4 போிடம் விசாரணை நடத்தினார். அப்போது மனித உரிமை மீறல் ஏதேனும் நடக்கிறதா? இங்கு தங்குவதற்கு வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? என்று விசாரித்தார். தப்பி ஓடியதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து கடலூர் மத்திய சிறைக்கும் சென்று, அங்குள்ள கைதிகளிடமும் மனித உரிமை மீறல் குறித்து பிரச்சினை உள்ளதா? என்று ஆய்வு செய்தார். முன்னதாக அரசு குழந்தைகள் காப்பகத்திலும் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை நடத்தினார். ஆய்வின் போது, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்