சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது -ராமதாஸ் பேச்சு
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க சார்பில் 'சமூக நீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை தி.நகரில் உள்ள சர்.பி.டி தியாகராயர் அரங்கில் நேற்று நடந்தது. பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன் நாச்சியப்பன், தமிழ்நாடு அரசின் முன்னாள் அரசு வக்கீல் மாசிலாமணி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அசோக் வரதன் ஷெட்டி, பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி உள்பட பலர் பங்கேற்றனர்.
கணக்கெடுப்பு
இந்த கருத்தரங்கில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு. அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் உடனடியாக சமூக நீதியை நிலை நாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 44 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்து வருகிறார். அன்றே, தமிழ்நாடு அரசு கணக்கெடுப்பு நடத்தியிருந்தால், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாறியிருக்கும்.' சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் எடுக்க மாட்டோம். எங்களால் முடியாது' என்று இன்று வரை ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். அப்போது எதற்காக சமூகநீதி பற்றி பேசுகிறார்கள்.
அதிகாரம்
கணக்கெடுப்பு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடமும், தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் ராமதாஸ் பலமுறை வலியுறுத்தி உள்ளார். பெரியார், அண்ணாவின் வாரிசு நாங்கள் என்று பேசும் அரசியல் கட்சிகள், அடிப்படை சமூக நீதியை கொடுக்கும் மனநிலைக்கு வரவில்லை.
தமிழ்நாடு அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எல்லாவிதமான அதிகாரமும் உள்ளது என தமிழ்நாடு அரசின் முன்னாள் வக்கீல் மாசிலாமணி கூறுகிறார். ஆனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948-ன்படி எங்களுக்கு அதிகாரம் இல்லை என கூறுகிறார்.
கோரிக்கை
அதற்கு, பிறகு பல சட்டங்கள் புதிதாக வந்துள்ளன. புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் 2008-ன்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. மாநில அரசு இது போன்று சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தால் மத்திய அரசு அதில் தலையிட கூடாது என சட்டம் சொல்கிறது. இதையே பீகார் ஐகோர்ட்டும் சுட்டிக்காட்டி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சுற்றி உள்ளவர்கள் அவரை இந்த விஷயத்தில் முடிவெடுக்க விடாமல் தடுக்கின்றனர். எனவே, இதுதொடர்பாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சந்திப்பு
தொடர்ந்து, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:-
சுதந்திரத்திற்கு முன்பு நாட்டில் 100 சதவீத இடஒதுக்கீடு இருந்தது. இதன்மூலம் சமூக நீதி நிலைநாட்டப்பட்டது. 1941-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரை காரணம் காண்பித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தற்போது, சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசிடம், மாநில அரசு முறையிடுவது, கையில் வெண்ணெய்யை வைத்து கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது.
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்தேன். அதே கோரிக்கைக்காக அவரது மகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.