சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உண்டு - அன்புமணி ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் தயங்குகிறார்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-06-26 06:01 GMT

சென்னை,

சென்னை தியாகராய நகரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் உடன் நடத்த வேண்டும் அப்படி நடத்தினால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்; இது மிகப்பெரிய மோசடி.

மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் வன்னியர்களுக்கு எப்படி இடஒதுக்கீடு தரமுடியும்?. முக்கிய சமுதாயங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். ஆனால் அதை செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் தயங்குகிறார்?.

புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் 2008-ன்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பஞ்சாயத்து தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த சட்டத்தின் படிதான் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உண்டு. மாநில அரசுதான் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்