ரூ.1¾ லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்கம்
பாலக்குறிச்சி அரசு பள்ளியில் ரூ.1¾ லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்கம்;
கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பாலக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பாலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வகுப்பினால் மாணவர்களின் கல்வி திறன் மேம்பாடு அதிகரிக்கும், கற்றலுக்கு எளிமையாக இருக்கும், மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடம் குறித்த விளக்கத்தினை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ள உதவும். உலகளவில் கல்வி குறித்த தகவல்களை இங்குள்ள தொடுதிரை மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அருணகிரி, வட்டார கல்வி அலுவலர்கள் லீனஸ், பாத்திமா ஆரோக்கிய மேரி, பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.