வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
வேடந்தாங்கல் மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.;
செங்கல்பட்டு,
தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நீர்பறவைகள், நிலப்பறவைகள் என இரண்டு பரிவாக நடைபெறுகிறது.
இதில் நீர்பறவைகளின் கணக்கெடுப்பு நேற்று (28-ந்தேதி) தொடங்கியது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், நீர்நிலைப் பகுதிகள் மற்றும் பறவைகள் தங்கக் கூடிய பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
இதேபோல் பள்ளிக்கரணை பகுதியிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மட்டும் 9 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் பறவை ஆர்வலர்கள், மாணவர்களும் பங்கேற்று கணக்கெடுத்து வருகின்றனர். நிலப்பறவைகளின் கணக்கெடுப்புபணி மார்ச் மாதம் 4-ந்தேதி மற்றும் 5-ந்தேதிகளில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.