அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு எதிர்ப்பு ெதரிவித்துஎடைமேடை மீது நின்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு எதிர்ப்பு ெதரிவித்துஎடைமேடை மீது நின்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-07-05 18:44 GMT

தக்கலை:

தக்கலை அருகே உள்ள காயக்கரை பகுதியில் பல கல்குவாரிகள் உள்ளன. இங்கிருந்து லாரி, டெம்போ மூலம் ஜல்லி, மணல் ஆகியவைகள் உள்ளூர் தேவைக்கும், கேரள மாநிலத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது. லாரிகளில் கொண்டுசெல்லப்படும் கனிமவளங்களை எடைபோடுவதற்கு சித்திரங்கோட்டில் அரசு எடைமேடை உள்ளது.

இதில் எடை போட்ட பிறகே லாரிகள் அங்கிருந்து செல்ல முடியும். இதில் அதிக பாரம் ஏற்றி வந்தால் அனுமதிப்பது இல்லை. ஆனால் தற்போது எடைமேடையில் பணியாற்றும் ஊழியர்கள் அதிக பணம் வாங்கிகொண்டு அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை அங்கிருந்து அனுமதிப்பதாகவும், இதனால் கல்குவாரிகளில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் வருகிற காயல்கரை சாலையின் ஒருபுறம் 20 அடி பள்ளமும், மறுபுறம் ஆறும் செல்வதால் அதிக பாரம் தாங்காமல் சாலை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு தடை விதிப்பதோடு எடைமேடையில் பணியாற்றும் ஊழியர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை 6 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எடைமேடை மீது நின்று திடீர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் யேசுராஜா தலைமை தாங்கினார். காங்கிரஸ் மேற்கு மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ் முன்னிலை வகித்தார். வேர்க்கிளம்பி பேரூராட்சி கவுன்சிலர் சிங் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தினால் கனிமவளங்களை குவாரிகளில் இருந்து ஏற்றி வந்த லாரிகள் செல்லமுடியாமல் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கொற்றிக்கோடு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரியிடம் பேசி 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரசார் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்