முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
சென்னை,
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரசின் முன்னெடுப்பு திட்டங்களான 'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' என்ற பெயரில் ஏற்கனவே இது போன்ற கூட்டம் 3 முறை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைப்பாடுகள், புதிய திட்டங்களின் தொடக்கம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதே போல் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது.
இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் எவ்வளவு பேர் பயன் அடைந்துள்ளனர் என்பதை பட்டியலிட்டார். இன்னும் எவ்வளவு பேருக்கு திட்டம் மூலம் பலன் கிடைக்கும் என்பது பற்றியும் விளக்கி கூறினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, கா.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன் மெய்ய நாதன், மதிவேந்தன் பங்கேற்றனர். இவர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசுத்துறை முதன்மைச் செயலாளர்கள், துறை வாரியான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.