மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு
மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந்தேதியன்று மர்மமான முறையில் இறந்தார். மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி மனுதாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு வந்தபோது 5 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் நேற்று 4-வது முறையாக அவர்களின் ஜாமீன் மனுக்கள் மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சாந்தி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கடும் ஆட்சேபனை
இவ்வழக்கு விசாரணைக்காக மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி கோர்ட்டுக்கு வந்திருந்தார். விசாரணையின்போது மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் வக்கீல் காசிவிஸ்வநாதன் ஆஜராகி, மாணவி ஸ்ரீமதியின் தலை, மூக்கு, மார்பு பகுதியில் காயங்கள் இருப்பதால் அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்துள்ளனர், இவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிற வேளையிலேயே சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் வெளியாகி வருகின்றன. சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கேட்டால் அவர்கள் வெளியிடவில்லை என்கிறார்கள். அப்படியானால் இவ்வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பள்ளி நிர்வாகத்தினர்தான் வீடியோ பதிவுகளை வெளியிட்டு இவ்வழக்கை திசைதிருப்ப பார்க்கிறார்கள். சிறையில் இருந்துகொண்டே சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட செய்கிறார்கள். இவர்கள் வெளியே வந்தால் இன்னும் என்னென்ன செய்வார்கள், சி.பி.சி.ஐ.டி. விசாரணை முழுமையாக முடிவடையாத நிலையில் அவர்கள் 5 பேரையும் ஜாமீனில் விடுவித்தால் சாட்சியங்களை கலைக்க நேரிடும் என்பதால் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார்.
அதற்கு பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் சார்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜராகி, மாணவி ஸ்ரீமதியின் உடலில் இருக்கும் காயங்களை வைத்து பாலியல் வன்புணர்ச்சியால் ஏற்பட்ட காயங்கள் என்று சொல்ல முடியாது. இன்னும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை முழுமை பெறவில்லை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவினரின் ஆய்வறிக்கையும் சமர்பிக்கப்படவில்லை. இவ்வழக்கில் கைதான 5 பேரும் போலீசாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை வெளியிட்டு வழக்கை திசைதிருப்ப வேண்டிய அவசியம் எங்கள் தரப்புக்கு இல்லை, கனியாமூர் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அவர்கள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
அதேபோல் பள்ளி முதல்வர் சிவசங்கரன் தரப்பில் வக்கீல் சீனிவாசன் ஆஜராகி, சக்தி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் சிவசங்கரன் இல்லை, அவர் சி.பி.எஸ்.இ. பள்ளிக்குத்தான் முதல்வர், சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சக்தி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் விடுமுறையில் இருந்ததால் அப்பள்ளிக் முதல்வர் பொறுப்பை சிவசங்கரன் கவனித்து வந்துள்ளார் என்றும், அவரது உடல்நிலையை கருதியும் சிவசங்கரனுக்கு ஜாமீன் வழங்கும்படி வாதிட்டார்.
5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
அப்போது அரசு தரப்பு வக்கீல் சங்கீதா குறுக்கிட்டு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முழுமை பெறாததாலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கை வராததாலும், அதுபோல் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் தாக்கல் செய்த ரிட் மனு சென்னை ஐகோர்ட்டில் வருகிற 29-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளதாலும் அதுவரை ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்கும்படி வாதிட்டார். இதையடுத்து இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதி சாந்தி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.