நெல்லையில் தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி புழல் சிறைக்கு மாற்றம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்று கைதான இலங்கை அகதி புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.;
இலங்கையை சேர்ந்தவர் ஜாய் (வயது 35). இவர் தனது 8 வயதில் அகதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு வந்தார். அங்கிருந்து சமீபத்தில் தப்பிச் சென்ற அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும், ஜாய் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று, தன்னை இலங்கையில் உள்ள பெற்றோரை பார்ப்பதற்கு அனுப்பி வைக்குமாறு கூறி மனு கொடுத்து வந்தார்.
நேற்று முன்தினம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஜாய் மனு கொடுத்தார். அதை வாங்கிய அதிகாரிகள், உங்களை மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைப்போம். அங்கிருந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று கூறினர்.
பின்னர் வெளியே வந்த அவர் கலெக்டர் அலுவலக புறக்காவல் நிலைய கண்ணாடி ஜன்னலில் தலையால் முட்டி கண்ணாடியை உடைத்தார். பின்னர் கண்ணாடி துண்டை எடுத்து கையை கிழித்துக்கொண்டும், கழுத்தில் வைத்துக் கொண்டும் தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்ற சென்ற 2 போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பின்னர் அவரை அங்கிருந்த போலீசார் பிடித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து கலெக்டர் அலுவலக அறையின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், தற்கொலைக்கு முயற்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாயை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை ஜாய், சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.