இலங்கை அகதி மகனுக்கு 3 வாரத்தில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

இலங்கை அகதியின் மகனுக்கு 3 வாரத்தில் பாஸ்போர்ட் வழங்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-04-06 19:46 GMT

மதுரை, 

இலங்கை அகதியின் மகனுக்கு 3 வாரத்தில் பாஸ்போர்ட் வழங்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இலங்கை அகதி மகன்

இலங்கையை சேர்ந்தவர் சகாயநாதன். இவர் இந்தியாவுக்கு 1990-ம் ஆண்டில் அகதியாக வந்தார். அவர் சிவகங்கை நாட்டரசன்கோட்டை அகதிகள் முகாமில் தங்கி உள்ளார். அந்த சமயத்தில் இதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மேரி கிறிஸ்டியானாவை காதலித்தார். அவர்கள் 2001-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் மகன் நியாடைட்டஸ். இவர் வேலைக்காக வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தார்.

அவரது பிறப்பு சான்றிதழில் இலங்கை அகதி என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பாக விளக்கம் கேட்டு மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசை ரத்து செய்து தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்று நியாடைட்டஸ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அகதிகளுக்கு பாஸ்போர்ட்

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

உலகநாதன் என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கில் இலங்கை அகதிகள் திரிசங்கு நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டினேன். இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கும்படி ஏற்கனவே உத்தரவிட்டேன்.

அந்த வகையில் இது, 4-வது வழக்கு. இதுபோன்ற வழக்குகள் குறிப்பிட்ட நீதிபதி முன்பு விசாரணைக்கு வருவது எப்படி என பொதுவெளியில் பலர் பேசுகின்றனர். அவர்களுக்கு நீதித்துறையின் நடைமுறையை கற்பிக்க வேண்டியுள்ளது.

தலைமை நீதிபதியின் முடிவு

அதாவது ஐகோர்ட்டில் எந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதிதான் முடிவு செய்கிறார். இந்த நடைமுறையானது, 3 மாதத்துக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படுகிறது. நான் கடந்த 6 ஆண்டுகளாக பொதுவான வழக்குகளை விசாரித்து வருகிறேன். அதனால் இலங்கை அகதிகள் தொடர்பான வழக்குகள் என்னிடம் விசாரணைக்கு வருகின்றன.

இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரர் 18.1.2002 அன்று பிறந்து உள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்தின்படி 1.7.1987-க்கு பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள், அவர்களின் பெற்றோர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால் இங்கு பிறந்தவர்களும் இந்திய குடிமகன், குடிமகள்தான். குடியுரிமை சட்டத்திருத்தம் 2004-ம் ஆண்டில்தான் அமலுக்கு வந்தது.

3 வாரத்தில் பாஸ்போர்ட்

மனுதாரர் கட்-ஆப் தேதிக்கு முன்பே பிறந்துவிட்டார். மேலும் அவரது தாயார் இந்தியர். பிறப்பு சான்றிதழில் இலங்கை அகதி என்று இருப்பது மனுதாரரின் தவறு கிடையாது. அதிகாரிகள் அவ்வாறு குறிப்பிட்டு இருக்கலாம். இவற்றை கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு 3 வாரத்தில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்