குண்டடம் அருகே உள்ள நால்ரோடு பகுதியில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நால்ேராடு பகுதி
குண்டடம் அருகே உள்ள நால்ரோடு பகுதி. இந்த பகுதி திருப்பூர்- தாராபுரம் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து மிகுந்த முக்கிய இடமாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து பஸ் ஏறி கோவை, தாராபுரம், ஒட்டன்சத்திரம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
மேலும் பெட்ரோல் விற்பனை நிலையம், தனியார் மில்கள், எலக்ட்ரிக் கடைகள், மளிகைக் கடைகள், மருந்துக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பனியன் கம்பெனி உள்ளிட்டவை இங்கு அமைந்துள்ளன. இதன் காரணமாக எந்த நேரமும் இந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த ரோடு போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது.
வேகத்தடை அமைக்கவேண்டும்
மேலும் கோவை-மதுரை- திருப்பூர்- காங்கேயம் ஆகிய சாலைகளுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையாக உள்ளது. நெடுந்தூரம் செல்லும் வாகனங்கள் மெயின்ரோடு என்பதால் அசுர வேகத்தில் கடந்து செல்கின்றன. இதனால் அதே நேரத்தில் மற்ற பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் பிரிந்து செல்லும்போது அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு பல பேர் பலியாகிய சம்பவம் நடந்துள்ளது
எனவே நால்ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் வேகத்தடை அமைத்தால் மட்டுமே விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. எனவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.