பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு தடுமாறுகிறது; ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு தடுமாறுகிறது என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு தடுமாறுகிறது என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
பிளவு சக்திகள்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. சாதி, மதம், மொழி, வடநாடு, தென்நாடு என்று பல வேறுபாடுகளை தான் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் வளர்க்கின்றனர். இந்த நேரத்தில் மக்களை ஒன்றுபடுத்தி, அனைவரும் ஒரு தாய் மக்கள் எனும் உணர்வை வளர்க்க காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தி தலைமையில் பாதயாத்திரையை நடத்துகிறது.
இதை பாரத் சோடோ என்று கொச்சைப்படுத்துகின்றனர். மகாத்மாகாந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்காதவர்கள் தான், தற்போது பாதயாத்திரையை கொச்சைப்படுத்துகின்றனர். அவர்களுக்கு வெள்ளையனே வெளியேறு என்பதிலும் ஆர்வம் இல்லை, இந்தியாவை ஒற்றுமைபடுத்த வேண்டும் என்பதிலும் ஆர்வம் கிடையாது. இதன்மூலம் யார் பிளவு சக்தி என்பது தெரிகிறது.
மத்திய அரசு தடுமாற்றம்
தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்ததாக புள்ளி விவரம் இல்லை. குற்றங்கள் நடக்கின்றன, ஆனால் அதிகரித்து விட்டன என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பொருளாதாரத்தை பற்றி அறியாமல், தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றினால் பொருளாதாரம் பலவீனம் ஆகும்.
நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய இரண்டும் தான் கொடி கட்டி பறக்கிறது. இந்த கொடியை தான் பிரதமரும், நிதி மந்திரியும் அண்ணாந்து பார்த்து கொண்டு இருக்கின்றனர். வேலையின்மை, பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு தடுமாறி கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.