ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் நாவடக்கத்துடன் பேச வேண்டும்; கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி
ஓ.பன்னீர்செல்வம் பதவி ஆசை இல்லாதவர் என்றும், ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.;
பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் வந்து, அவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் வட சென்னை மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, இன்று பெரியகுளத்தில் உள்ள வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் நாவடக்கத்துடன் பேச வேண்டும். எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் பதவி வெறி பிடித்தவர்கள். ஓ.பன்னீர்செல்வம் பதவி ஆசை இல்லாதவர். அரசியலில் கீழ்மட்டத்தில் இருந்து வந்தவர். அவர் தனது உழைப்பால் உச்சபட்ச பதவியான முதல்-அமைச்சர் பதவியை 3 முறை கண்டவர். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வையும், கட்சி தொண்டர்களையும் கட்டிக்காக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டவர்.
இவ்வாறு அவர் கூறினார்.