ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
மதுரையில் ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் பரிகாரம் செய்தனர்.
மதுரையில் ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் பரிகாரம் செய்தனர்.
ராகு- கேது பெயர்ச்சி
ராகு- கேது பெயர்ச்சி 1½ ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அதன்படி, நேற்று மதியம் 3.35 மணிக்கு நடைபெற்றது. அதாவது, ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் மீன ராசிக்கு ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு கேதுவும் இடம் பெயர்ந்தார்கள்.
இதனை முன்னிட்டு, மதுரையில் உள்ள கோவில்களில் நவக்கிரக சன்னதியில் உள்ள ராகு- கேதுவிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பால், தயிர் போன்ற பொருட்களை அபிஷேகத்திற்கு கொடுத்து பரிகாரம் செய்தனர். பின்னர் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதுபோல், கால பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
சிறப்பு யாகம்
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில், ராகு- கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. யாக சாலையில் வைத்த புனித நீரை கும்பத்தில் சுமந்து சிவாச்சாரியார்கள், கோவிலை வலம் வந்து நவக்கிர சன்னதிக்கு சென்று அங்குள்ள ராகு- கேதுவிற்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ராகு- கேது பெயர்ச்சியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், ஆதி சிவன் கோவில், திருவாதவூர் கோவில், தென் திருவாலவாய கோவில், பழைய மீனாட்சி சொக்கநாதர் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் ராகு-கேதுவிற்கு ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால், அந்தந்த கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ேசாழவந்தான்
இதே போல் சோழவந்தான் வைகை கரையில் உள்ள பிரளயநாத சுவாமி கோவிலில் நேற்று ராகு-கேது பெயர்ச்சி விழா நேற்று மாலை நடந்தது. இதில் தொழில் அதிபர் எம்.வி.எம். மணிமுத்தையா தலைமையில் கவுன்சிலர் வள்ளிமயில், பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. ஹோமம் முடிந்ததும் ராகு-கேதுக்கு பால், தயிர் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் ராசிகளுக்கு பரிகார பூஜை நடத்தி வழிபட்டனர்.