கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டனர்.;
ஆடி அமாவாசை
ஆடி 2-வது அமாவாசையையொட்டி நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
சடையால் முனீஸ்வரர்
தேனி கொட்டக்குடி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சடையால் முனீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையையொட்டி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடி அமாவாசையையொட்டி கோவிலில் முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முனீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.
கோவிலில் காலையில் இருந்து இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் காத்திருந்து அன்னதானம் சாப்பிட்டுச் சென்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போடி
போடி பஸ்நிலையம் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ெதாடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதுபோல், மாவட்டம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.