பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி, போடியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் உள்ள தொட்டராயர் பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது.
பக்தர்கள் தரிசனம்
பெரியகுளம் தென்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு, வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர்-ராதை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து திருவிளக்கு பூஜை மற்றும் எல்லோருக்கும் எல்லாவித நன்மைகளும் கிடைக்க வேண்டி கூட்டு பிரார்த்தனை ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.