பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.;
திருவெண்காடு:
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
சீர்காழி அருகே நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு பெருமாளுக்கு பால், வாசனை திரவியங்கள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், கணக்கர் ரத்தினவேல், ஸ்தலத்தார்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நாங்கூர் வைகுண்ட பெருமாள், பள்ளிகொண்ட பெருமாள், செம்பொன் அரங்கர், குடமாடு கூத்தர், பார்த்தன் பள்ளி பார்த்தசாரதி பெருமாள், திருமேனி கூடம் வரதராஜ பெருமாள், கீழச்சாலை மாதப் பெருமாள் உள்ளிட்ட 11 திவ்ய தேச கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வடரங்கம் ரங்கநாத சாமி கோவில்
அண்ணன் பெருமாள் கோவிலில் கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு பிரமோற்சவம் தொடங்கியது. இதையொட்டி நேற்று பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதை அடுத்து பெருமாள் மலர் அலங்காரம் செய்யப்பட்டு அனுமந்தவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் நாராயணா என சரண கோஷமிட்டு மனமுருக வழிபாடு நடத்தினர்.
இதேபோல் சீர்காழி அருகே உள்ள வட ரங்கம் ரங்கநாயகி உடனுறை ரங்கநாத சாமி கோவில், தலைச்சங்காடு நான் மதிய பெருமாள் கோவில், விலநகர் பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
பஞ்ச நரசிம்மர் கோவில்
இதேபோல் திருவெண்காடு அருகே திருக்குறலூரில் உக்கிர நரசிம்மர், மங்கை மடத்தில் வீர நரசிம்மர், திருநகரியில் யோக, ஹிரண்ய நரசிம்மர்கள் மற்றும் திருவாளியில் லட்சுமி நரசிம்மர் என ஐந்து நரசிம்மர்கள் உள்ளன. இவர்களை ஒரே நாளில் வழிபட்டால் எதிரிகள் பயம் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம். நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி மேற்கண்ட நரசிம்மர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதனையொட்டி அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், வைணவ அடியார்கள் திரு கூட்டத்தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.