பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெருமாள் கோவில்
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று, போடியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலை முதலே கோவிலில் பொதுமக்கள் குவிந்தனர். பெருமாளுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு ஏலக்காய் மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் சுப்ரபாதம் பாடப்பட்டது. தொடர்ந்து பெருமாளுக்கு நட்சத்திர தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சிறப்பு வழிபாடு
இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ராதாஷ்டமி மற்றும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கிருஷ்ணர்- ராதைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர்- ராதை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது உலக நன்மை வேண்டி 16 மணி நேர மஹா மந்திர கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.