நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நவ திருப்பதி கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.;
தென்திருப்பேரை:
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நவ திருப்பதி கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
நவ திருப்பதி கோவில்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கோவில்கள் தாமிரபரணி ஆற்றுக்கு வடபுறமும், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளை சேர்ந்த கோவில்கள் தாமிரபரணி ஆற்றுக்கு தென்புறமும் அமைந்துள்ளது.
இக்கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் தரிசனம்
பக்தர்கள் சிரமமின்றி பெருமாளை வழிபட ஏதுவாக கம்புகள் கட்டப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டது. புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கடந்த நான்கு வாரமாக பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் திரளாக வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். கோவில்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் சுகாதார வளாக வசதி அமைக்கப்பட்டு இருந்தது. கோவில்களுக்கு வெளியே குளிர்பான கடைகளிலும் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர்கள் கோவல மணிகண்டன், அஜித் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்து இருந்தனர். சுகாதார வசதிகளை அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், நகர பஞ்சாயத்துகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி போலீசாரும் செய்திருந்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி பூதேவி- நீலாதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 4-வது சனிக்கிழமைமையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள், தீபாராதனை, வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 8 மணிக்கு திருவீதி உலா, கருட சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.