வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

வைகாசி விசாகத்தையொட்டி, தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்;

Update: 2023-06-02 18:45 GMT

தர்மபுரி:

வைகாசி விசாகம்

தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி, சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனைகள், சிறப்பு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தைெயாட்டி நேற்று அதிகாலை முதல், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தங்க கவச அலங்கார சேவையும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.

இந்த சிறப்பு வழிபாட்டில் மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க மயில் வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

அன்னசாகரம்

தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழாவில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பயபக்தியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் எஸ்.வி.ரோடு சுப்ரமணிய சுவாமி கோவில், நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி சன்னதி, பாரதிபுரம் சுப்ரமணியசாமி கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதேபோல் லலிகம், இண்டூர், பாப்பாரப்பட்டி, கம்பைநல்லூர், பாலக்கோடு, தீர்த்தமலை, அரூர், இருளப்பட்டி, காரிமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்