ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update: 2023-07-22 19:28 GMT

ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடிப்பூரம்

உலக மக்களை காப்பாற்றுவதற்காக ஆடி மாதம் பூரம் நட்சத்திர தினத்தன்று பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த தினமே ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சைவ, வைணவ ஆலயங்களில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெறுகிறது.

அம்மன் நித்தியகன்னி என்பதால் பிள்ளைபேரு, வளைகாப்பு கிடையாது என்பதால் ஆடிப்பூர தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது. அதன் பின்பு அம்மனுக்கு அணிவித்த வளையல் பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சிறப்பு பூஜை

அந்த வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ஆடிமாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைக்கு அடுத்தப்படியாக ஆடிப்பூர நாளும் சிறப்பு பெறுகிறது.

அந்த வகையில் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி திருச்சி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில், தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொட்டியம்-முசிறி

தொட்டியத்தில் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முசிறி துறையூர் ரோட்டில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மன் பண்டரி விட்டல் ருக்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ரத வீதி உலா

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு அம்மன் ரதத்தில் வீதிஉலா வந்தார். உற்சவ மண்டபத்தில் தங்ககவசம் சாற்றப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு இருந்த வெக்காளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிறிய ரதத்தில் வெக்காளி அம்மன் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்