மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்
10, 12-ம் வகுப்பில் கடைசி நிலையில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவுறுத்தினார்.
மகளிர் உரிமைத்தொகை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சி பணிகள், நிலுவை, முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தேசிய நலவாழ்வு குழும இயக்குனருமான (தமிழ்நாடு) ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளிகள் ஒருவர் கூட விடுபடாமல் சேர்க்கப்பட வேண்டும். வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் ரேஷன் கடை பணியாளர்கள் பொதுமக்களுக்கு அவர்கள் கேட்கும் தகவல்களுக்கு உரிய பதிலை வழங்கிட வேண்டும்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் விண்ணப்பம் வினியோகிக்கப்பட வேண்டும். முகாம் நடைபெறும் நாளில் அதிக கூட்டம் சேராமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
விரைந்து முடிக்க வேண்டும்
ஊரக வளர்ச்சித் துறையில் 2 ஆண்டுகள் ஆகியும் முடிவு பெறாமல் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வருவாய்த் துறையில் பட்டா மாற்றம் பணிகளில் வருவாய் கோட்டாட்சியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி தள்ளுபடி மனுக்கள் அதிகளவில் உள்ளதை மனுதாரரை நேரில் அழைத்தோ அல்லது நேரடியாக சென்றோ அதற்கான காரணங்களை கேட்டறிந்து, அதன் உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். தகுதியான மனுக்களை தள்ளுபடி செய்து விட்டு, மக்கள் அலைகழிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் கடைசி நிலையில் இருக்கிறது. பெரும்பாலும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பணி இடமாற்றத்தால் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்தது. அதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு தற்பொழுது நல்ல முறையில் உள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்து இருக்கிறார்.
ஆசிரியரை நியமிக்க வேண்டும்
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் திறமையை அறிந்து அவர்களுக்கு தனித்தனியா பயிற்றுவிக்க வேண்டும். பள்ளிக்கு ஒரு ஆசிரியரை இப்பணியை கண்காணிக்க நியமிக்க வேண்டும். அவர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு முன்னேற்றங்கள் மற்றும் எவ்வாறு சிறப்பு பயிற்சிகள் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை வழங்கிட நல்ல முறையில் செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்து நியமித்து கண்காணிக்க வேண்டும்.
அதேபோன்று ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களை அந்த வகுப்பு ஆசிரியர் கண்காணித்து கடைசி நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள், வகுப்புகள், முதல் நிலை மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டியில் பங்கேற்கும் வகையில் பயிற்சி வழங்க வேண்டும். அனைத்து நிலை மாணவர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ப ஊக்கத்தை வழங்கிட ஆசிரியர்கள் பணியாற்றுவதை முதன்மை கல்வி அலுவலர் கண்காணித்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் அனைத்து துறைகளின் பணிகளை கேட்டறிந்து, நிலுவைப் பணிகளை உடனடியாக முடிக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளி, வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.