கோடநாடு வழக்கு: சென்னை நிறுவனத்தில் கோவை போலீஸ் டி.ஐ.ஜி. திடீர் சோதனை
கோடநாடு வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள நிறுவனத்தில் கோவை டி.ஐ.ஜி. தலைமையில் நேற்று சோதனை நடைபெற்றது.
கோடநாடு கொலை-கொள்ளை
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் இல்லத்தில் நடந்த கொலை - கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த உயிரிழப்புகள் இந்த வழக்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எனவே இதில் உள்ள மர்மங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வகையில் போலீசார் மீண்டும் இந்த வழக்கு விசாரணையை கையில் எடுத்தனர். இந்த வழக்கு தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சசிகலாவிடமும் விசாரணை நடந்தது. அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் விசாரணை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் திடீர் சோதனை
இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள நிறுவனத்தில் கோடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணம் சிக்கியிருக்கும் தகவல் தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் கோவையை சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனைக்கு உள்ளான சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள நிறுவனத்தில் கோவை டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது இந்த கட்டிடத்தின் உரிமையாளர், சர்வீஸ் மையம் நடத்தி வந்த நபர் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். நேற்று மதியம் தொடங்கிய சோதனை மற்றும் விசாரணை இரவு வரை நீடித்தது.
சூடுபிடிக்கிறது
கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் வேளையில், இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.