ஆங்கில புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஆங்கில புத்தாண்டையொட்டி சேலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.;
குழந்தை இயேசு பேராலயம்
ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள குழந்தை இயேசு தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் 2023-ம் ஆண்டு அனைவருடைய வாழ்விலும் வளம் பெறவும், நோய் நொடியின்றி வாழ வேண்டியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சிறப்பு பிரார்த்தனை
இதேபோல் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர் டேவிட் தலைமையிலும், கோட்டை சி.எஸ்.ஐ. லெக்லர் நினைவாலயத்தில் ஆயர் எழில் ராபர்ட் கெவின் தலைமையிலும், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தில் ஆயர் பெட்ரிக் தானுப்பிள்ளை தலைமையிலும், சூரமங்கலம் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்தில் ஆயர் சாந்தி பிரேம்குமார் தலைமையிலும், புதுரோடு ஐ.பி.ஏ. திருச்சபையில் பாதிரியார் ஜான்சன் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சூரமங்கலத்தை அடுத்துள்ள ஆண்டிப்பட்டி அப்போஸ்தல விசுவாச எழுப்புதல் சபையில் நேற்று இரவு போதகர் ஆரோன் மற்றும் ஜோ பால்சன் ஆகியோர் தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல், ஜான்சன்பேட்டை அந்தோணியார் ஆலயம், செவ்வாய்பேட்டை ஜெயராக்கினி ஆலயம், அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயம் மற்றும் சங்ககிரி, மேட்டூர், தாரமங்கலம், ஆத்தூர், எடப்பாடி, ஏற்காடு உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
மேலும் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தாண்டை வரவேற்று பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.