கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தூத்துக்குடியில் புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2023-01-01 18:45 GMT

தூத்துக்குடியில் புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

புத்தாண்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தூத்துக்குடி சின்னக்கோவிலில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது.

இதேபோன்று தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை குமாரராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சிகளில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அன்றனி புருனோ தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கொண்டாட்டம்

மேலும் தூத்துக்குடியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

நேற்று காலையில் மக்கள் புத்தாடைகள் அணிந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

நேற்று காலையில் இந்து கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் வழக்கம் போல் நடந்தன.

அதே நேரத்தில் திரளான பக்தர்கள் காலை முதல் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவில், வைகுண்டபதி பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இங்கு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இரவு நேரங்களில் மக்கள் ஆலயங்களுக்கு செல்வதால் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து அதிகவேகமாக வாகனம் ஓட்டி செல்வதை தடுத்தனர். வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர்.

மேலும் நேற்று காலையில் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே புத்தாண்டை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகப்பெருமாள், வெங்கடேஷ், நாகராஜன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்