சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
சித்ரா பவுர்ணமி
சித்ரா பவுர்ணமியையொட்டி புதுக்கோட்டையில் நேற்று கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுக்கோட்டையில் நாகத்தம்மாள் கோவிலுக்கு பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்து சென்றனர். இதேபோல் வடக்கு 3-ம் வீதியில் உள்ள மகிமை நாயகி முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். மேலும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சாந்தநாத சாமி கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
சங்காபிஷேகம்
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமியையொட்டி சங்காபிஷேகம் மற்றும் மலை மேல் உள்ள முருகன் மற்றும் வள்ளி-தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று மலைமேல் உள்ள மகாமண்டபத்தில் சிவனுக்கு 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் மூலவர் முருகன் வள்ளி-தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் சாற்றி அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆவுடையார்கோவில் அருகே சித்தக்கூர் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் சித்ரா பவுர்ணமியைெயாட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் ஆவுடையார்கோவில் ஒன்றியம் வீரமங்கலம் அருகே உள்ள காதர் மறவர் காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாகமுத்து மாரியம்மன்
கீரனூர் ஈச்சங்காடு திடீர் நகரில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி கீரனூர் கருப்பர் கோவிலிருந்து பக்தர்கள் காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்துச் சென்றனா். அதில் ஒரு பக்தர் 22 அடி நீளமுள்ள வேலை அலகு குத்திசென்று வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர் நாகமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் அன்னதானமும், மாலை அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அம்பாளுக்கு நீராட்டுதல் நடைபெறுகிறது.
கீரனூர் அய்யப்பா நகரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குளத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
ஜெகதீஸ்வரர் கோவில்
மணமேல்குடி ஜெகதீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 67 நாயன்மார்களில் ஒருவரான குலச்சிறை நாயனார் பிறந்து வழிபட்ட சிவன் கோவிலாகும். இந்த கோவிலில் தனிமண்டபத்தில் உள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் காப்புக்கட்டி பவுர்ணமி உற்சவ விழா சிறப்பாக நடந்து வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் காப்புக்கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காப்புக்கட்டிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு மண்டகப்படிதாரர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும், சுற்றுவட்டார கிராம மக்கள் விரதம் இருந்து காவடி, பால்குடம் எடுத்துவந்து வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
பாலதண்டாயுதபாணி
வடகாடு செட்டியார் தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் சித்திரை மாத சித்ரா பவுர்ணமியையொட்டி வடகாடு பெரியகடை வீதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் மற்றும் அலகு குத்திக்கொண்டும் வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முத்துமாரியம்மன்
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அப்பகுதி பெண்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் நொடியின்றி வாழவும் முளைப்பாரிகளை தலையில் சுமந்தவாறு வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குள நாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பெரியநாயகிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருக்கட்டளை சுந்தரமாகாளியம்மன் கோவில், அழகாம்பாள்புரம் அழகம்பாள் கோவில், இம்மனாம்பட்டி முத்துமாரியம்மன் கோவில், பாரதியார் நகர் புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவில், திருவரங்குளம் பிடாரியம்மன் கோவில், தெற்கு ரத வீதி தைலம்பால் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.