முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
காவடி பழனியாண்டவர்
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று காலையில் மூலவருக்கு 64 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் காவடி பழனியாண்டவருக்கு தங்ககவசம் சாத்துபடி செய்து பூஜை செய்யப்பட்டது. இதைதொடர்ந்து காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் முருகன் பெருமை சொற்பொழிவு நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு பக்தி பாடல்கள் இன்னிசையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் காவடி பழனியாண்டவருக்கு தீர்த்தஅபிஷேகம் செய்து வழிபட்டனர். மூலவருக்கு ராஜஅலங்காரம் செய்து பூஜை நடந்தது.
இதையடுத்து இரவு 7.30 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது. தங்கரத்தில் வள்ளி, தெய்வாணையுடன் காவடி பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்த தங்கரதத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
வடசென்னிமலை
தலைவாசலை அடுத்த வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று சாமி சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் வீரகனூர் குமரன் மலை முருகன் கோவில், சார்வாய் முருகன் கோவில் வரகூர் முருகன் கோவில், ஊனத்தூர் முருகன் கோவில், தேவியாகுறிச்சி முருகன் கோவில், ஈச்சம்பட்டி பாலமுருகன் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
எடப்பாடி
எடப்பாடி அருகே உள்ள வெண்குன்று மலைக்கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி பால தண்டாயுதபாணி கோவிலில் சாமிக்கு 108 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ராஜா அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
எடப்பாடி அருள்ஞான பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விரதம் இருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கல்லபாளையம் ஞான கந்தசாமி கோவில், கவுண்டம்பட்டி முத்துக்குமாரசாமி கோவில், க.புதூர் கந்தசாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கந்தாஸ்ரமம்
மேலும் சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமத்தில் நேற்று முருகனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.