அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தாிசனம் செய்தனர்.

Update: 2023-08-11 18:45 GMT

ஆடி கடைசி வெள்ளி

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி ேநற்று நாமக்கல் ராஜீவ் காந்தி நகரில் உள்ள பலப்பட்டறை சுயம்பு மங்களமாரியம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட 16 பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

அதைத்தொடர்ந்து மாரியம்மன் சாமிக்கு ஆயிரக்கணக்கான வளையல்களை கொண்டு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதேபோல் பலப்பட்டரை மாரியம்மன், வேலகவுண்டம்பட்டி சின்ன மாரியம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார். இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெற்றிலை அலங்காரம்

ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 4-வது வெள்ளிக்கிழமை என்பதால் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகங்கள், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒரு லட்சம் வெற்றிலைகளை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை முதல் இரவு வரை ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்திருந்த அம்மனை தரிசித்து விட்டு சென்றனர்.

இதேபோல் ராசிபுரம் குஞ்சு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ராமலிங்க சாவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. அம்மன் சர்ப்ப ரூப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்திருந்து அம்மனை தரிசித்து விட்டு சென்றனர்.

அதேபோல் ராசிபுரத்தில் உள்ள எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், குறுக்கபுரம் அத்தனூர் அம்மன் கோவில் கொழிஞ்சிப்பட்டி பண்ணையம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ராசிபுரம் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனர்.

செல்லாண்டியம்மன்

மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று பால் குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி 28-ம் ஆண்டு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராடி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, மாரியம்மன், செல்லாண்டியம்மனுக்கும் பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பால்குட ஊர்வலம், விளக்கு பூஜை

இதேபோல் பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையத்தில் பழமையான எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று ஆவத்திபாளையம் காவிரி ஆற்றில் இருந்து 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். சமயசங்கிலி ரோடு, குமாரபாளையம் ரோடு வழியாக கோவிலை அடைந்தது. இதைத்தொடர்ந்து எல்லை மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தாிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி மகா மாரியம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும், குடும்பத்தினர் நலம் வேண்டியும் இந்த விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

பொன் காளியம்மன், செல்வ மாரியம்மன்

நாமகிரிப்பேட்டை அடுத்த நெடுஞ்சாலையில் உள்ள ஆர்.பி. காட்டூர் கிராமத்தில் பொன் காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்தாண்டு 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 17 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைந்தது. பின்னர் பொன் காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

வெண்ணந்தூர் தங்கசாலை வீதியில் அமைந்துள்ள செல்வமாரியம்மன் வெற்றிலையால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தனர்.

மகாமாரியம்மன், பகவதியம்மன்

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மகா மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்களும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனுக்காக வழங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனையும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா மாரியம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்படுகளை மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் நன்செய் இடையாறு மாரியம்மன், வேலூர் புது மாரியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், கோப்பணம்பாளையம் மாசாணியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

வேலூர் பேட்டையில் உள்ள பகவதியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையொட்டி பகவதியம்மனுக்கு பாலாபிஷேகமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலை அம்மன் கோவில் வளாகத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்