முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.;
வாசுதேவநல்லூர்:
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் அருள் பாலிக்கும் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாககன்னியம்மன், பால நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு தை பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதையொட்டி அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மாக்களுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், ஜவ்வாது மற்றும் 21 வகையான நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் கோவில் முன்பு தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி செங்கரும்பு, காய்கறிகள், பழங்கள், பனங்கிழங்கு படையல் வைத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. தைப்பொங்கல் விழாவை பற்றி கோவில் குருநாதர் சக்தியம்மா பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.