கஞ்சா பறிமுதல் வழக்கில் தப்பியோடிய 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

கஞ்சா பறிமுதல் வழக்கில் தப்பியோடிய 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2023-06-24 19:05 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே அம்மாசத்திரம் பகுதியில் கடந்த 13-ந் தேதி இரவு சரக்கு வேனில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காய்கறி மூட்டைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 409 கிலோ கஞ்சா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்த முயன்ற இந்த சம்பவத்தில் சரக்கு வேனில் வந்த 2 பேரும் தப்பியோடிவிட்டனர். போலீசார் விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், சிப்பிக்குளம் கீழ வைப்பாறு ஸ்ரீ வைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 24), தூத்துக்குடி சிப்பிக்குளம் குளத்தூர் கிழக்கு பகுதியை சேர்ந்த ஸ்டார்வின் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்தனர். இதுவரை அவர்கள் பிடிபடவில்லை. அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க சென்றதில் ஒரு தனிப்படையினர் திருப்பி வந்த நிலையில், மற்றொரு தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டத்திற்குள் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்