அரியானா, ஆந்திர மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் ரூ.72¾ லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அரியானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.

Update: 2023-02-13 11:51 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் ரூ.72¾ லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அரியானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.

4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு திருவண்ணாமலையில் 2 ஏ.டி.எம். மையங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ.டி.எம். மையங்களிலும் மர்ம நபர்கள் வெல்டிங் எந்திரத்தின் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதிலிருந்த பணத்தை கொள்ளைடித்தனர்.

இதில் திருவண்ணாமலை மற்றும் போளூரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையங்களிலும், கலசபாக்கத்தில் ஒன் இண்டியா என்ற தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்திலும் கைவரிசையை காணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து நேற்று  அதிகாலையில் தகவலறிந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் முகாமிட்டு உள்ளனர். மேலும் இதுகுறித்து 9 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரூ.72¾ லட்சம்

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் 10-வது தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.20 லட்சத்து 2 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும், தண்டராம்பட்டு சாலை தேனிமலை உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.31 லட்சத்து 13 ஆயிரத்து 900 கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் போளூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.19 லட்சத்து 22 ஆயிரத்து 700 கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக போளூர் போலீசாரும், கலசபாக்கத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக கலசபாக்கம் போலீசாரும் வழக்கப்பதிவு செய்து உள்ளனர்.

ஆக மொத்தம் 4 ஏ.டி.எம். மையங்களில் ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600 கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஒரே மாதிரியான எந்திரங்கள்

ஏ.டி.எம். மையங்களில் உள்ள பணம் எடுக்கும் எந்திரங்கள் பல்வேறு வகையில் உள்ளன. இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற 4 ஏ.டி.எம். மையத்தில் உள்ள பணம் எடுக்கும் எந்திரங்களும் ஒரே மாதியானவை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த வகை எந்திரங்களை பற்றி முழுமையான தொழில்நுட்பங்கள் தெரிந்த கைதேர்ந்தவர்களால் இந்த கொள்ளை சம்பவம் நடந்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் பணம் வைக்கும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருவண்ணாமலை நகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் பார்வையிட்டு சோதனை நடத்தி உள்ளனர்.

போலியான பதிவெண்

போலீசாருக்கு கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் படி இந்த கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று யூகித்து உள்ளனர். சுமார் 2 மணி நேரத்தில் 4 ஏ.டி.எம். மையங்களிலும் கொள்ளையடித்து விட்டு அவர்கள் தப்பி சென்று உள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கொள்ளையர்கள் காரில் கள்ளக்குறிச்சி சாலை வழியாக வந்து வரிசையாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட டாடா சுமோ காரில் வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் அவர்கள் வந்த காரின் பதிவெண் போலியானது என்பதும், அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள சுங்கச்சாவடிகளின் கண்காணிப்பு கேமராக்களில் சிக்காமல் சென்று உள்ளதும் தெரிய வந்துள்ளது.

தனிப்படை போலீசார்

மேலும் போலீசாருக்கு கிடைத்த ஆதாரங்களை கொண்டு தனிப்படை போலீசார் அரியானா, ஆந்திர மாநிலங்களுக்கு சென்று அந்த மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி போலீசார் தொடர்ந்து திருவண்ணாமலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபர்கள் எவரேனும் திருவண்ணாமலையில் உள்ள விடுதிகளில் தங்கி இருந்தனரா என்றும் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் போலீசார் நேற்று முன்தினம் இரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தொடர் ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தினால் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்