சமூக வலைதளங்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் - ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை
சமூக வலைதளங்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.;
சென்னை,
கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகவும் அரசியல் கட்சி தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் சாரு அலெக்சாண்டர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சமூக வலைதளங்களை கண்காணிக்கக்கூடிய வகையில் ஏற்கெனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவல் ஆணையர் அலுவலகங்கள் கண்காணிப்பாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் சுற்றறிக்கை அனுப்பியதாகவும் அதன் அடிப்படையில் ஒவ்வொரு காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் காவல் ஆணையர் அலுவலகங்களிலும் உதவி ஆய்வாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் குழு ஒன்று செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அரசு உயர் பதவியில் இருப்பவர்கள், நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்து பதிவிடுவதை தடுக்கும் வகையில் இந்த குழுவானது கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் பதிவிடுவதை கண்காணித்து தடுக்க அமைக்கப்பட்டுள்ள இந்த குழுக்களை தவிர மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.